முருகனின் அறுபடை வீடுகள் – திருத்தணி

திருத்தணி – சுப்பிரமணியர் சுவாமி திருக்கோயில்

முருகன், வேடனாகி, விருத்தனாகி, வேங்கை மரமாகி, விநாயகப் பெருமான் அருளால் வள்ளியை மணந்து வள்ளிமணாளனாக திருத்தணிகையில் எழுந்தருளினார். முருகப்பெருமான் சூரபத்மனுடன் செய்த பெரும் போரும், வள்ளியை கரம் பிடிக்க வேடர்களுடன் செய்த சிறு போரும் முடிந்து, சீற்றம் தணிந்து அமர்ந்த தலம் ஆதலால், இது தணிகை எனும் பெயர் பெற்றது.

தேவர்களது அச்சம் தணிந்த தலம், அடியவர்களது துன்பம், கவலை, பிணி மற்றும் வறுமை ஆகியவற்றை தணிக்கும் தலம் ஆதலால் தணிகை எனும் பெயர் பெற்றதாகவும் கூறுவர்.
திருமாலிடம் இருந்து தாரகாசுரன் கைப்பற்றிய சக்ராயுதத்தை, முருகன் மீது ஏவினான். அதைத் தன் மார்பில் ஏற்றுக்கொண்ட முருகன், சக்ராயுதத்தை திருமாலிடமே திரும்ப ஒப்படைத்தாராம்.

தணிகை முருகனின் திருமார்பில் சக்ராயுதம் பதிந்த தழும்பைக் இன்றும் காணலாம்.
பிரம்மன் இந்த தலத்தில்தான் தணிகைவேலனை தவமிருந்து வழிபட்டு, படைக்கும் வல்லமையை மீண்டும் பெற்றாராம். பிரம்மன் உருவாக்கிய பிரம்ம தீர்த்தம் மற்றும் பிரம்மேஸ்வரர் லிங்கத்தை மலைப்பாதையில் தரிசிக்கலாம்

சரஸ்வதிதேவியும் தணிகை வேலனை வழிபட்டு அருள்பெற்றதற்கு சான்றாக சரஸ்வதி தீர்த்தமும் ஸ்ரீசரஸ்வதீஸ்வரர் லிங்கமும் இத்தலத்தில் உள்ளது. வருடத்தின் 365 நாட்களைக் குறிக்கும் விதமாக 365 படிகளுடன் திகழ்கிறது திருத்தணி மலை. கருவறையில் முருகனுக்கு பின்புறம் வள்ளி, தெய்வானை இருவரும் இருக்கின்றனர்.  இவர்களுக்கு தனி சந்நிதிகளும் உள்ளன.

முருகன் சூரனை வதம் செய்த பிறகு கோபம் தணிந்து வந்து அமர்ந்ததால் சூரசம்ஹார விழா இங்கு நடைபெறுவதில்லை. மாறாக அன்று முருகனை குளிர்விப்பதற்காக புஷ்பாஞ்சலி நடைபெறுகிறது. முருகனுக்கு இந்திரனே காணிக்கையாகக் கொடுத்ததாகச் சொல்லப்படும் சந்தனக்கல்லில், அரைக்கப்படும் சந்தனம் மட்டுமே சாத்தப்படுகிறது. ஸ்ரீபாதரேணு எனும் இந்த சந்தனத்தை பக்தர்கள் நீரில் கரைத்து குடித்தால் பல நோய்கள் நீங்குவதாக நம்பிக்கை.

திருத்தணி – சுப்பிரமணியர் சுவாமி திருக்கோயில் சிறப்புக்கள்

மூலவர் சன்னதி மேலே உள்ள விமானம் ஆறு தளங்களைக் கொண்டது. ஆறுபடை வீடுகளில் இங்குதான் உயரமான கருவறை கோபுரம் உள்ளது. திருத்தணியில் மயிலுக்குப் பதிலாக ஐராவத யானையே முருகப் பெருமானின் வாகனமாகத் திகழ்வது சிறப்பு. அருணகிரிநாதர் திருப்புகழிலும், நக்கீரர் திருமுருகாற்றுப்படையிலும், ராமலிங்க அடிகளாரும் முத்துச்சாமி தீட்சதரும் இத்தலத்து முருகனை குறித்து பாடியுள்ளார்.

இங்கு, பள்ளியறை பூஜையின்போது ஒரு நாள் வள்ளியுடனும், மறு நாள் தெய்வயானையுடனும் எழுந்தருள்கிறார் முருகப் பெருமான். எந்த முருகன் தலத்திலும் இல்லாத சிறப்பு இது. மாசி மாதம் முருகன்-வள்ளி திருக்கல்யாணமும், சித்திரை மாதம் முருகன்-தெய்வானை திருக்கல்யாணமும் வெகு விமரிசையுடன் நடைபெறுகின்றன. மகா சிவராத்திரி அன்று தணிகை முருகனுக்கு 1008 சங்காபிஷேகம் நடைபெறும். தமிழ்ப் புத்தாண்டு அன்று கீழேயுள்ள ஸ்ரீஆறுமுக சுவாமி கோயிலில் இருந்து 1008 பால் குடங்கள் மலை மேல் உள்ள முருகனுக்கு பக்தர்களால் சுமந்து செல்லப்பட்டு அபிஷேகம் செய்யப்படும்

திருத்தணிகை சுப்ரமணிய சுவாமியை வழிபடுவோம்…

நோய்நொடியற்ற நல்வாழ்வை பெறுவோம்!