முருகனின் அறுபடை வீடுகள்-திருச்செந்தூர்

திருச்செந்தூர்- சுப்பிரமணியசுவாமி கோயில்

சங்க இலக்கியங்களிலும், சிலப்பதிகாரத்திலும் குறிப்பிடப்பட்டுள்ள இக்கோயில் 2000 ஆண்டுகள் பழமையானதாக கருதப்படுகின்றது. முருகனின் அறுபடை வீடுகளில் கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள திருக்கோயில் இதுவாகும். தமிழ் இலக்கியங்களில் திருச்செந்தூர் அலைவாய், சீரலைவாய் என்கிற பெயர்களில் போற்றப்பட்டுள்ளது

முருகன், சூரனை வெற்றி பெற்று ஆட்கொண்டதால், செயந்திநாதர் என அழைக்கப்பெற்றார். பிற்காலத்தில் “செயந்தி நாதர்” என்பது செந்தில்நாதர் எனவும், “திருஜெயந்திபுரம்” என்பது, திருச்செந்தூர் எனவும் மருவியது.

திருச்செந்தூர் ஆலயம், ஓம் எனும் பிரணவத்தை அடிப்படையாகக் கொண்டு, வாஸ்து லட்சணங்களோடு கட்டமைக்கப்பட்டுள்ளது. சுப்பிரமணியசுவாமி, தலையில் சிவயோகி போல ஜடாமகுடம் தரித்து, நான்குகரங்களுடன், வலது கையில் தாமரை மலருடன் அருளுகிறார். முருகன் சூரசம்ஹாரம் முடிந்ததும் தாமரை மலர் கொண்டு சிவபூஜை செய்ததை உணர்த்தும் வகையில் இன்றும் மூலவரின் வலது கையில் தாமரை மலர் உள்ளது.

மூலவருக்கு இடது பின்புற சுவரில் ஒரு லிங்கம் இருக்கிறது. எனவே முதல் தீபாராதனையை லிங்கத்துக்கு காட்டியபின்பே, முருகனுக்கு தீபராதனை நடக்கும்.
திருச்செந்தூர் தலத்தில் சண்முகர், ஜெயந்தி நாதர், குமரவிடங்கர், அலைவாய் பெருமான் என நான்கு உற்சவர்கள் உள்ளனர். இவர்களில் குமரவிடங்கரை ‘மாப்பிள்ளை சுவாமி’ என்று அழைக்கிறார்கள்.

முருகன் சன்னதிக்கு வலப்புறத்தில் பஞ்சலிங்க சன்னதி இருக்கிறது. இவர்களை தரிசிக்க மார்கழி மாதத்தில் தேவர்கள் வருவதாக ஐதீகம்.திருச்செந்தூரில் வீரபாகு காவல் தெய்வமாக உள்ளார். இதனால் இத்தலத்துக்கு வீரபாகு பட்டினம் அல்லது வீரபாகு ஷேத்திரம் என்றும் பெயர் உண்டு. செந்திலாண்டவனுக்கு பூஜை செய்யும் முன்பு, முதலில் வீரபாகுவுக்கு பூஜை செய்து பிட்டு படைத்து வழிபடுகின்றனர்.

திருச்செந்தூர்- சுப்பிரமணியசுவாமி கோயில் சிறப்புக்கள்

இங்குள்ள நாழிக்கிணறு எனும் ஸ்கந்த புஷ்கரணியை, முருகப்பெருமான், தம் படை வீரர்களின் தாகம் தணிக்க வேலாயுதத்தால் ஏற்படுத்திய நீர் ஊற்று என ‘கந்தபுராணம்’ கூறுகிறது. திருச்செந்தூரில் மட்டும் கந்தசஷ்டி விழா 12 நாட்கள் கொண்டாடப்படுகிறது. முதல் ஆறுநாட்கள் சஷ்டி விரதம், சூரசம்ஹாரம் நடக்கும். ஏழாம் நாளில் முருகன், தெய்வானை திருக்கல்யாணம், அடுத்த 5 நாட்கள், சுவாமி மணக்கோலத்தில் ஊஞ்சல் சேவை நடக்கும்.

கோயிலின் இடது பக்கத்தில் உள்ள வள்ளிக்குகையின் சந்தன மலையில் தொட்டில் கட்டி வழிபாடு நடத்தினால் குழந்தை பேறு கைகூடும் என்பது நம்பிக்கை. சூரனை ஆட்கொண்டபோது செய்த உதவிக்காக, இத்தலத்தில் தனக்கு நிகரான வழிபாட்டு மரியாதை குரு பகவானுக்கும் தரப்படும் என அருள்புரிந்தார் முருகப்பெருமான்.

திருச்செந்தூர் செந்தில்நாதரை வணங்குவோம்!

எல்லாம் நலன்களையும் பெறுவோம்!

திருச்செந்தூர் பற்றிய ஸ்லைடு வீடியோவைக் காண கீழ்கண்ட லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்

https://www.facebook.com/HinduSpiritualSongs/videos/2369989469998042/