முருகனின் அறுபடை வீடுகள்-சுவாமிமலை

சுவாமி மலை – சுவாமிநாதசுவாமிகோயில்

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுள் சுவாமிமலையும் ஒன்று. சுவாமிமலையை புராணங்களும் இலக்கியங்களும் திருவேரகம் என்றே குறிப்பிடுகின்றன. ‘ஏர்’ என்றால் அழகு; ‘அகம்’ என்றால் வீடு என்பர். அழகு மிக்க படைவீடு ஆதலால் இதற்கு திருவேரகம் (திரு+ ஏர் + அகம்) என்று பெயர் வந்ததாம்.

சிவபெருமானே, முருகனிடம் சீடனாக அமர்ந்து பிரணவத்தின் பொருளை கேட்டுத் தெரிந்து கொண்டது இந்த தலத்தில்தான்… முருகப் பெருமானின் உபதேசத்தைக் கேட்ட சிவன், தன் மகனை ‘நீயே சுவாமி!’ என்று கூறியதனால் இந்தத் தலம் சுவாமிமலை எனும் பெயர் பெற்றது.முருகப் பெருமான் சுவாமிநாத சுவாமி மற்றும் தகப்பன் சுவாமி ஆகிய திருநாமங்களுடன் இங்கு கோயில் கொண்டார்.

சுவாமிமலை இயற்கையான மலை அல்ல. ஏராளமான கருங்கற்களைக் கொண்டு கட்டப்பட்ட ஒரு மாடக்கோவில் ஆகும். மன்னன் வரகுண பாண்டியனால் கட்டப்பட்ட இந்தக் கோயில், முதலாம் பராந்தகச் சோழன் காலத்தில் மேலும் விஸ்தாரமாக்கப்பட்டது என கூறப்படுகிறது . மலைக்கோயிலின் கீழ்த்தளத்தில் மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர், விநாயகர், சோமாஸ்கந்தர், விசுவநாதர், விசாலாட்சி, தட்சிணாமூர்த்தி ஆகியோரின் சன்னதிகள் அமைந்துள்ளன.

சுவாமிநாதனை தரிசிக்க நாம் 60 தமிழ் வருடங்களின் பெயர்களைத் தாங்கி நிற்கும் 60 படிகள் மேல் ஏறிச் செல்ல வேண்டும். 60 அதிதேவதைகள் இந்தப் படிகளில் உறைவதாக திருக்குடந்தை புராணம் குறிப்பிடுகிறது.

மூலவர் சுவாமிநாதன் நான்கரை அடி உயர நின்ற கோலத்தில் கம்பீரமாக காட்சித் தருகிறார். வலது கரத்தில் தண்டாயுதம் தரித்து, இடது கரத்தை இடுப்பில் வைத்து, சிரசில் ஊர்த்துவ சிகாமுடியும், மார்பில் பூணூலும் ருத்திராட்சமும் விளங்க…சுவாமிநாத சுவாமி காட்சித் தருகிறார். ஆபரண அலங்காரத்தின் போது, ராஜ கோலத்தினராகவும், சந்தன அபிஷேகத்தின்போது பால குமாரனாகவும், விபூதி அபிஷேகத்தின்போது முதியவர் கோலத்திலும் காட்சி தருகிறார் ஸ்வாமிநாதர்.

மகாமண்டபத்தில் மயிலுக்குப் பதிலாக முருகனுக்கு இந்திரனால் வழங்கப்பட்ட ஐராவதம் என்ற யானை நிற்கிறது.

சுவாமிமலையின் சிறப்புகள்

சுவாமிமலையின் முக்கிய திருவிழாவாக திருக்கார்த்திகை விழா 10 நாட்கள் நடைபெறுகிறது. ஐப்பசியில் கந்த சஷ்டி விழா, மார்கழியில் திருவாதிரைத் திருநாள், தை மாதத்தில் தைப்பூசப் பெருவிழா, பங்குனியில் வள்ளி திருக்கல்யாணம் ஆகியன முக்கிய விழாக்கள் ஆகும்

நக்கீரர் திருமுருகாற்றுப்படையிலும், இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்திலும் அருணகிரிநாதர் திருப்புகழிலும் சுவாமிமலை பற்றி பாடியுள்ளனர்.

சுவாமிமலை சுவாமிநாதனை வழிபடுவோம்!

அனைத்து நலன்களையும்பெறுவோம்!

சுவாமிமலை பற்றிய ஸ்லைடு வீடியோவைக் காண கீழ்கண்ட லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்

https://www.facebook.com/HinduSpiritualSongs/videos/1841130842658499/