ஶ்ரீராமநவமி-சிறப்புக்களும் பெருமைகளும்

ஶ்ரீராமநவமி என்றால் என்ன?

ஶ்ரீராமபிரான் இப்புவியில் அவதரித்த நாளே ராம நவமியாக கொண்டாடப்படுகிறது.
பொதுவாக மக்கள் அனைவரும் அஷ்டமி, நவமி தினங்களில் எந்த காரியத்தையும் செய்ய மாட்டார்கள். அந்த இரு திதிகளையும் புறக்கணித்து விடுவார்கள்…
இதனால் கவலையுற்ற அஷ்டமி, நவமி ஆகிய இரு திதிகளும், மகா விஷ்ணுவிடம் சென்று தங்களுக்கு ஏற்பட்டுள்ள குறையை கூறி வேண்டினர். அப்போது விஷ்ணு பகவான், ‘அஷ்டமி, நவமி இரண்டையும் மக்கள் அனைவரும் போற்றி துதிக்கும் நாள் வரும்’ என்று உறுதியளித்தார்.

அதன்படியே வாசுதேவர்-தேவகி ஆகியோருக்கு மகனாக, அஷ்டமி திதியில் கிருஷ்ணர் தோன்றினார். அன்றைய தினம் கிருஷ்ணஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது.
சித்திரை மாதம் வளர்பிறை நவமி திதியில் நண்பகல் நேரத்தில் தசரதர்- கௌசலை தம்பதியருக்கு மகனாக ஶ்ரீராமர் பிறந்தார்.

ஶ்ரீராமர் பிறப்பதற்கு முன் ஒன்பது நாட்கள் ஒரு விரத முறையாகவும், பிறந்ததில் இருந்து ஒன்பது நாட்கள் மற்றொரு விரத முறையாகவும் ராமநவமியை வழிபடுகின்றனர்.
சித்திரை மாதம் வளர்பிறை பிரதமை திதியில் இருந்து நவமி திதி வரை உள்ள ஒன்பது நாள் விரதம் கர்ப்போஸ்தவம் என்று பெயரில் ராமநவமி கொண்டாடப்படுகிறது..
சித்திரை மாத சுக்லபட்ச நவமி திதியில் இருந்து அடுத்து வரும் ஒன்பது நாட்கள் ஜன்மோதீஸவம் என்று பெயரில் ராமநவமி கொண்டாடப் படுகிறது..

ராமநவமி விரதம் இருப்பது எவ்வாறு?

விரதத்தை தொடங்குவதற்கு முதல் நாள், நம் வீட்டை சுத்தம் செய்ய வேண்டும்.
பூஜை அறையில் ஶ்ரீராமர் படத்தை வைத்து, அதற்கு குங்குமம், சந்தனம் இட்டு, துளசிமாலை அணிவிக்க வேண்டும். பின் பழம், வெற்றிலை, பூ வைத்து ஸ்ரீராம நாமத்தை சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும்.

ஶ்ரீராமநவமி நாள் அன்று காலையில் விரதம் இருந்து, ராமபிரானை வணங்கி வழிபடுபவர்களுக்கு ஆஞ்சநேயரின் அருட்பார்வை கிட்டும் என்பது நம்பிக்கை.
ஶ்ரீராமரை பற்றிய நூல்களை படித்தும், அவரது துதியை பாராயணம் செய்வதுமாக இருப்பது நன்மை அளிக்கும். ஶ்ரீராமநவமி நாளில், ஶ்ரீராமர் கோவில்களில் நடைபெறும் பட்டாபிஷேகத்தை கண்டுகளிக்கலாம். வழிபாட்டின் போது நைவேத்தியமாக சர்க்கரை பொங்கல், பஞ்சாமிர்தம், பானகம், பாயாசம், வடை போன்றவற்றை படைக்கலாம்.

விரதம் தொடங்கும் நாளன்று ராமநாமத்தை உச்சரித்துக் கொண்டிருக்க வேண்டும்.
ராமருக்கு துளசி மாலையும், அனுமனுக்கு வடை மாலையும் சாத்த வேண்டும்.
இதனை ஒன்பது நாளும் செய்ய முடியாதவர்கள், ராம நவமி தினத்திலாவது செய்ய வேண்டும். ராமநவமி விரத நாட்களில் ராமஜாதகத்தை காகிதத்தில் அல்லது செப்பு தகட்டில் வரைந்து வழிபடுவது சிறப்பான பலனை தரக்கூடியது.

ஶ்ரீராமநவமி வழிபாட்டு பலன்கள்

ஸ்ரீராம நாமத்தை உச்சரிப்பதால் ஆணவம் அழிந்து அன்பும், அறிவும் உண்டாகும். மனதில் அமைதியும், மகிழ்ச்சியும் விளையும். ஶ்ரீராமநவமி நாளில் விரதமிருந்து இறைவனை வேண்டிக் கொண்டால் குடும்பத்தை விட்டுப் பிரிந்தவர்கள் ஒன்று சேருவர் என்பது நம்பிக்கை. குடும்ப நலம் பெருகி, வறுமையும், பிணியும் அகலும், நாடியப் பொருட்கள் கைகூடும் என்ற ஐதீகம் உண்டு.


ஶ்ரீராமநவமி விரதம் மேற்கொள்வதால் நினைத்த காரியம் கைகூடும். செல்வம், புகழ் என எண்ணற்ற பலன்கள் கிடைக்கும்.

ஶ்ரீராமநவமி அன்று விரதமிருந்து வழிபடுவோம்!

ஸ்ரீராமரின் அருளை பெற்றிடுவோம்!

https://www.facebook.com/HinduSpiritualSongs/videos/392222234946438/